ஓபன் டாக் கொடுத்த விராட் கோலி; கடும் அதிருப்தியில் பிசிசிஐ!

Updated: Tue, Sep 06 2022 14:39 IST
Image Source: Google

கடந்த ஐபிஎல் 15ஆவது சீசனுக்குப் பிறகு இங்கிலாந்து தொடரில் மட்டுமே கோலி பங்கேற்றார்.அந்த இங்கிலாந்து தொடரில் கோலி சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடர்களிலும் கோலி பங்கேற்காமல் ஓய்வுக்கு சென்றார். இதனால், கோலி அடுத்து ஆசியக் கோப்பையில் தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே, அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பையில் சேர்க்கப்படுவார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் கோலி அபாரமாக விளையாடி அசத்தி வருகிறார். இதுவரை மூன்று போட்டிகளில் இரண்டு அரை சதங்களை கோலி அடித்துள்ளார். கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி அரை சதம் அடித்தப் பிறகு, பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அப்போது தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த கோலி, “நான் டெஸ்ட் அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு, எனக்கு மெசேஜ் அனுப்பியது தோனி மட்டும்தான். எனது செல்போன் எண் நிறைய பேரிடம் இருக்கிறது. ஆனால், யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை. தோனி மீது நான் கொண்டிருந்த மரியாதை, மதிப்பு அனைத்தும் உண்மையானது. என்னால் அவர் பாதுகாப்பானவராக உணர்ந்ததில்லை. அதேபோல் அவரால் நான் பாதுகாப்பானவராக உணர்ந்ததில்லை’’ எனக் கூறினார். 

இதனால், பிசிசிஐ மீது பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்நிலையில் கோலியின் இந்த பேட்டிக்கு பிசிசிஐ அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், “விராட் கோலி இந்த நேரத்தில் ஏன் இப்படி பேசினார் என எங்களுக்கு சுத்தமாக புரியவில்லை. கோலிக்கு ஒட்டுமொத்த அணி நிர்வாகமும் ஆதரவாக உள்ளது. அவர் தனக்கு தேவையான நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு பிசிசிஐ ஆதரவாக இருக்கிறது. கோலி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியப் பிறகு அனைத்து பிசிசிஐ நிர்வாகிகளும், அவரது பணிக்காக நன்றியை தெரிவித்தோம். அப்படியிருந்தும், கோலி ஏன் அப்படி பேசினார் எனத் தெரிவில்லை” என்றார். 

பிசிசிஐ நிர்வாகியின் இந்த பேட்டிக்கு கோலி, அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி விளக்கம் அளிக்க சொல்லி நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை