CT2025: தொடக்க நிகழ்ச்சியை துபாய்க்கு மாற்ற பிசிசிஐ கோரிக்கை!

Updated: Wed, Jan 22 2025 13:14 IST
Image Source: Google

ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 

இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை பிப்ரவரி 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐசிசி நிகழ்வுகளில் வழக்கமான நடைமுறையான தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்பாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இரு அணிகளும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வருகின்றன. இருப்பினும் இவ்விரு அணிகளும் ஐசிசி நடத்தும் முக்கியமான தொடர்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகின்றனர். 

மேலும் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெற இருந்த நிலையில், பிசிசிஐ-யின் அழுத்தம் காரணமாக இத்தொடரானது ஹைபிரீட் மாடலில் நடத்த திட்டமிடப்பட்டு, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் தொடக்க நிக்ழ்ச்சியில் ரோஹித் சர்மா பங்கேற்பாரா என்பது பெரும் கேள்வியாக இருந்தது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க நிகழ்ச்சியை பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இந்நிகழ்ச்சி பாகிஸ்தானில் நடைபெறும் என்றால், அதில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்பதில் பிசிசிஐ திட்டவட்டமாக உள்ளது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறாது என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக ஐசிசி தொடரை நடத்தும் நாட்டின் பெயர் மற்றும் அத்தொடருக்கான இலச்சினை ஆகிவை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் ஜெர்சியிலும் இடம்பெறுவது வழக்கம். ஆனால் பாகிஸ்தானின் பெயரை இந்திய ஜெர்சியில் அச்சிட முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்டிக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்து தொடரில் மட்டும்).

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை