இனி உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் ஐபிஎல் போன்று சம்பளம்?

Updated: Thu, Feb 29 2024 13:54 IST
இனி உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் ஐபிஎல் போன்று சம்பளம்? (Image Source: Google)

இந்திய அணி வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. இதில் ஆச்சரியப்படும் வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரது ஒப்பந்தகளை ரத்து செய்து பிசிசிஐ அதிரடி கட்டியது. காரணம் இவர்கள் இருவரும் பிசிசிஐ-யின் உத்தரவையும் மீறி உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடாததே என்று கூறப்படுகிறது.

அதேபோல் மற்ற சில வீரர்களும் இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஆர்வம் கட்டியதோடு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியது மிகப்பெரும் சிக்கல்கலை உருவாக்கியது. ஏனெனில் வீரர்கள் உள்ளூர் போட்டிகளைத் தவிர்த்து அதிக பணம் ஈட்டும் ஐபிஎல் தொடரின் மீது ஆர்வத்தை காட்டுவது பிசிசிஐக்கு மிகப்பெரும் தலைவலியைக் கொடுக்கும் என்பதுதான்.

ஏனெனில் இதற்குமுன் இதேபோன்று தான் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களும் தங்களது சொந்த அணிக்காக விளையாடாமல் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஃபிரான்சைஸ் டி20 லீக்குகளில் விளையாட ஆர்வம் காட்டினர். அதன் விளைவு தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி கூட பெற முடியாமல் வெளியேறியது. ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் அடையாளமாக பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை இருமுறை ஒருநாள் உலகக்கோப்பையை வென்றுள்ள நிலையில், தற்போது உலகக்கோப்பை தொடருக்கு தகுதிகூட பெறமுடியாமல் தவித்து வருகிறது. 

அதேபோல் இந்தியாவில் உள்ள வீரர்களும் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஓரங்கட்டி ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவதே பிசிசிஐ-க்கு எழுந்துள்ள மிகப்பெரும் சிக்கலாக பார்க்கப்படுகிறது. இதனால் பிசிசிஐ அடுத்தடுத்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதிதான் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருக்கும் வீரர்கள் தங்களது மாநில அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பது. அதனைத் தான் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மீறியதாக கூறி தற்போது ஒப்பந்த பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில், இனி வரும் காலங்களில் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்தும் முடிவையும் பிசிசிஐ தற்போது கையிலெடுத்துள்ளது. அதன்படி, ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களுக்கு தற்போதைய ஊதியத்தை விட மூன்று மடங்கு, அதாவது ரூ.75 லட்சம் ஊதியாமாக வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்திய சீனியர் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்கள் ஓராண்டு முழுவதும் விளையாடும் பட்சத்தில் அந்த வீரருக்கு ரூ.15 கோடி சம்பளம் அளிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஐபிஎல் தொடரில் முன்னணி வீரர்களுக்கு அளிக்கப்படும் தொகைக்கு நிகரான தொகையை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கும் ஊதியமாக வழங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் வீரகள் டி20 கிரிக்கெட்டை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஊதிய உயர்வு குறித்து பிசிசிஐ எந்த நிலைபாட்டில் உள்ளது என்பது தெரியவில்லை. இருப்பினும் பிசிசிஐயுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை