டிஆர்எஸில் இந்த விதியினை மாற்ற வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!

Updated: Mon, Feb 19 2024 13:03 IST
டிஆர்எஸில் இந்த விதியினை மாற்ற வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப்பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஸாக் கிரௌலி எல்பிடபிள்யூ (LBW) முறைப்படி பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனை எதிர்த்து ஸாக் கிரௌலி டிஆர்எஸ் முறையில் மூன்றாம் நடுவரிடம் முறையிட்டார். அப்போது டிஆர்எஸில் பார்த்த போது பந்து லேசாக ஸ்டம்பை தாக்குவது போல் காண்பிக்கப்பட்டது. இதனால் நடுவரின் முடிவு படி ஸாக் கிரௌலி அவுட் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இப்போட்டி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மூன்றாவது போட்டியில் டிஆர்எஸ் முறை பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கிரிக்கெட்டில் டிஆர்எஸ் முறை பெரும்பாலும் அதிர்ஷ்டத்தை போன்று தான். சில நேரங்களில் அது நமக்கு சாதகமாக அமையும், அல்லது நமக்கு எதிராக அமையும். மூன்றாவது போட்டியில் நாங்கள் எடுத்த டிஆர்எஸ் அனைத்தும் எங்களுக்கு எதிராகவே அமைந்தது.

தவறான முடிவுகள் வழங்கிய நடுவர்களை நான் குறை கூற விரும்பவில்லை, அவர்களது வேலை மிக கடினமானது என்பதை நான் அறிவேன். ஆனால் பந்து சுழலும் போது அது ஸ்டெம்பில் பட்டால் அதற்கு அவுட் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும், அவுட் கொடுக்காமல் நடுவரின் முடிவு என கொடுக்கப்படுவது ஏற்புடையது அல்ல. இதனால் நடுவரின் முடிவு நீக்கபட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

 

ஏனெனில் டிஆர்எஸின் போது நடுவரின் முடிவு என்பது பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தால் அது போட்டியின் இறுதி முடிவையும் மாற்றக்கூடும் என்பதை நாம் மறந்துவிட கூடாது. ஆனால் எங்களது படுதோல்விக்கு இது தான் காரணம் என நான் கூற விரும்பவில்லை. அதை நான் ஒரு போதும் கூற மாட்டேன். ஏனெனில் 557 ரன்கள் இலக்கு என்பது மிக பெரியது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை