யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று சொல்வது சரியல்ல - சுனில் கவாஸ்கர்!

Updated: Tue, Jan 10 2023 11:55 IST
'Better to have medical experts in selection panel than former cricketers': Gavaskar (Image Source: Google)

இந்தாண்டு ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்தியா செயல்பட உள்ளது. முன்னதாக கடந்த வருடம் வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்ற இந்தியா ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றில் தோற்று வழக்கமான ஏமாற்றத்தை கொடுத்தது. அதற்கு ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டார்கள் என்பதை விட ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர் போன்ற முக்கிய வீரர்கள் கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறியது முக்கிய காரணமாக அமைந்தது.

இத்தனைக்கும் அதற்கு முன்பாக ஏற்கனவே காயமடைந்து குணமடைந்து வந்த அவர்கள் மீண்டும் முக்கிய தொடர்களுக்கு முன்பாக காயமடைந்து வெளியேறியதால் கடுப்பான ரசிகர்கள் பெங்களூருவில் அவர்களை சோதிக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் என்ன தான் நடக்கிறது என்று கேள்வி எழுப்பினார்கள். அத்துடன் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கேப்டன் ரோகித் சர்மாவும் பிட்டாக இல்லாமல் அடிக்கடி காயம் மற்றும் பணிச் சுமையால் ஓய்வெடுத்ததால் வரலாற்றில் முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

எனவே இவை அனைத்துக்கும் சுமாரான ஃபிட்னஸ் தான் காரணம் என்று கருதிய பிசிசிஐ அடுத்து வரும் தொடர்களில் இந்தியாவுக்காக விளையாட தேர்வாகும் வீரர்கள் முதலில் யோ-யோ மற்றும் டெக்ஸா சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டியதை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது. அதாவது மிகவும் கடினமான உடல் தகுதி சோதனைகளை கொண்ட இந்த யோ-யோ டெஸ்ட் ஏற்கனவே கடந்த 2018 வாக்கில் விராட் கோலி கேப்டனாக இருந்த போது தீவிரமாக பின்பற்றப்பட்டது. ஆனால் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மூட்டை கட்டப்பட்ட அந்த டெஸ்ட் தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு நிறைய ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கும் நிலையில் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

அதாவது ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம் என்றாலும் அதற்காக யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று சொல்வது சரியல்ல என்று தெரிவிக்கும் அவர் பேசாமல் இந்திய வீரர்களை கிரிக்கெட் பற்றி தெரிந்த தேர்வுக்குழுவினரை வைத்து தேர்வு செய்யாமல் மருத்துவர் குழுவை வைத்து தேர்வு செய்யுமாறு பிசிசிஐயை சாடியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

இதுகுறித்து பேசிய அவர், “உடல் தகுதி என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதையும் அது அனைவருக்கும் பொருந்தாது என்பதையும் நான் இங்கே விவரிக்கும் முயற்சிக்கிறேன். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சுழல் பந்து வீச்சாளர்களை விட வித்தியாசமான பிட்னெஸ் தேவைப்படுகிறது. விக்கெட் கீப்பர்களுக்கு இன்னும் உயர்ந்த பிட்னஸ் தேவைப்படுகிறது. 

பேட்ஸ்மேன்களுக்கு அதை விட கொஞ்சம் குறைந்தபட்சம் போதுமானது. எனவே ஒவ்வொருவருக்கும் அளவுகள் அமைக்கப்படும் போது அது கடினமானது மற்றும் ஒருவரின் சிறப்புக்கு ஏற்பதாக இருக்காது. கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் முதன்மையான தேவையாக இருக்க வேண்டும். மேலும் இது பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வெளிப்படையாக நடக்கும் போது நமக்கு ஒரு வீரர் யோ-யோ டெஸ்டில் தேர்வாகிறாரா அல்லது நோ-நோ என்று சொல்லி தோற்கிறாரா என்பது தெரியும்.

மேலும் சிஏசி குழுவினர் தேர்வுக்குழுவினரை வெறும் இன்டர்வியூ வாயிலாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால் அதில் உயிரியகவியல் நிபுணரோ அல்லது உடல் அறிவியல் நபரோ இல்லை. எனவே இந்திய வீரர்களை தேர்வு செய்யும் முன்னாள் வீரர்களை கொண்ட தேர்வுக்குழுவில் பேசாமல் மருத்துவ நிபுணர்களை சேர்ப்பது நல்லது

அவை அனைத்தையும் விட ஒரு இடத்துக்கு 2 வீரர்களுக்கு இடையே போட்டி வரும் போது அந்த நிபுணர்கள் இருவரில் யார் மற்றவரை விட தகுதியானவர் என்பதை சொல்ல சிறந்த நிலையில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அந்த இருவரில் யார் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுத்தார்கள் என்பதை பொருட்படுத்த மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை