ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த  இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் லபுஷாக்னே 2 ரன்னிலும், சாம் கொன்ஸ்டாஸ் 23 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும் என நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - பியூ வெப்ஸ்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மிட்டனர்.இதில் ஸ்மித் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அலெக்ஸ் கேரியும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பியூ வெப்ஸ்டர் தனது அறிமுக போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த கேப்டன் பாட் கம்மின்ஸும் ரன்களை சேர்த்து வந்த நிலையில் 10 ரன்கள் எடுத்த் கையோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க்கும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் நிதிஷ் ரெட்டி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் கடந்து விளையாடி வந்த பியூ வெப்ஸ்டர் 57 ரன்களைச் சேர்த்த நிலையில், அடுத்து வந்த ஸ்காட் போலண்ட் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.

இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 51 ஓவர்களை மட்டுமே விளையாடி 181 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து நான்கு பவுண்டரிகளை விளாசி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 

அதேசமயம் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 13 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத் தொடர்ந்து 22 ரன்களை எடுத்திருந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் என அடுத்தடுத்து ஸ்காட் போலண்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய விராட் கோலி மீண்டும் ஒருமுறை அவுட்சைட் ஆஃப் திசையில் ஸ்லிப்பிடம் தனது கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆனால் ஷுப்மன் கில் மீண்டும் ஒருமுறை மோசமான ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தார்.

Advertisement

ஆனால் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்து அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் 29 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் இந்திய அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்த நிலையில், ரிஷப் பந்து 33 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டியும் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் மோசமான ஷாட்டை விளையாடி தனது விக்கெட்டை தாரை வார்த்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்தது. இதில் ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 145 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News