பட்லர் ஒரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன் - புவனேஷ்வர் குமார்!

Updated: Sun, Jul 10 2022 14:10 IST
Bhuvneshwar Kumar makes a BIG statement on Jos Buttler (Image Source: Google)

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையே நேற்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. 

இதில் பவர்பிளே ஓவர்களில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும், அதிக டாட் பால்களை வீசிய வீரராகவும் இருந்து வரும் புவனேஸ்வர் குமார் இந்த போட்டியிலும் முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டுடன் ஆரம்பித்து மெய்டன் ஓவராக வீசினார். இந்த போட்டியின் முடிவில் மூன்று ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டனுடன் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதிலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லருடைய விக்கெட்டை அவர் வீழ்த்தியது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து அவருக்கு ஆட்டநாயகன் விருந்து வழங்கப்பட்ட வேளையில் தனது இந்த சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய புவனேஸ்வர் குமார், “பந்து ஒரு மைதானத்தில் நன்றாக ஸ்விங் ஆகும்போது ஒரு பவுலராக நமக்கு பந்துவீச அதிகஅளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இங்கிலாந்து மைதானங்களில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றாலும் குறிப்பிட்ட அளவு நன்றாக பவுலர்களுக்கு ஒத்துழைக்கிறது.

அந்த வகையில் இங்கு நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் பந்துவீசி வருகிறேன். குறிப்பாக இங்கிலாந்து கேப்டன் பட்லர் விக்கெட்டை வீழ்த்தியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில் அவர் ஒரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன். பவர் பிளே ஓவர்களை தாண்டிவிட்டால் அவர் நிச்சயமாக பெரிய ஸ்கோர் அடிப்பார் அதை யாராலும் தடுக்க முடியாது. அவரை ஆரம்பத்திலேயே வீழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஒருமுறை நாம் பந்துவீசும் போது பந்து ஸ்விங் ஆகி நம்மை உற்சாகப்படுத்தினால் தானாக நம்மால் சிறப்பாக பந்து வீச முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். அந்த வகையில் இந்த தொடர் முழுவதுமே நான் சிறப்பாக பந்து வீசி வருவது எனக்கு நல்ல உத்வேகத்தை அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை