மீண்டும் காயத்தை சந்தித்த மயங்க் யாதவ்; லக்னோ அணிக்கு பின்னடைவு!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது இந்திய வீரர் ரிஷப் பந்தை ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுத்ததுடன், அந்த அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. இதனால் அந்த அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானது.
முன்னதாக கடந்தாண்டு வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரின் போது சர்வதேச கிரிக்கெட்டில் மயங்க் யாதவ் அறிமுகமானார். அத்தொடரில் ரசிகர்களில் கவனத்தை ஈர்த்த அவர், தொடரின் இறுதியில் காயத்தை சந்தித்தார். அதன்பின் காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த மயங்க் யாதவ் தற்போது வரை முழு உடற்தகுதியை எட்டமுடியாமல் உள்ளார். இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடாமியில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் பாதியிலாவது அவர் லக்னோ அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்சமயம் பயிற்சியிலும் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மயங்க் யாதவ் தனது காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் தற்சமயம் மீண்டும் காயத்தை சந்தித்துள்ளதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "கடந்த ஆண்டு மாயங்கைப் பற்றி எல்லோரும் மிகவும் உற்சாகமாக இருந்தனர், காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர் மிகவும் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் தனது கால் பகுதியில் காயத்தை சந்தித்துள்ளார். அவரது கால் விரலில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மறுவாழ்வில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்.
அவர் பந்து வீசும் காணொளிகளை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம். நேற்று அவரது காணோளியை பார்த்தேன். எனவே, தொடரின் முடிவிற்குள் மயங்க் முழுமையாக ஆரோக்கியமாகி எங்களுக்காக விளையாடத் தயாராக இருப்பார் என்று நம்புகிறேன். அதேசமயம் மொஹ்சின் கான் தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததன் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளது ஏமாற்றத்தை தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐபிஎல் ஏலத்திற்கு முன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.11 கோடிக்கும் மயங்க் யாதவை தக்கவைத்தது. இருப்பினும் அவர் காயம் காரணமாக முதல் பாதி தொடரை தவறவிடுவது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. மேற்கொண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அனுபவம் வாய்ந்த ஷர்தூல் தாக்கூரை அணியில் சேர்த்துள்ளது அந்த அணிக்கு சற்று நிம்மதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப், ஹிம்மத் சிங், சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கே
Also Read: Funding To Save Test Cricket
W