ஒரே இன்னிங்ஸில் இரு முறை பேட்டிங் செய்த ஜடேஜா, ஸ்ரேயாஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான பயிற்சி போட்டியாக இங்கிலாந்தின் கவுண்டி அணியுடன் இந்திய அணி மோதி வருகிறது.
கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 246 /8 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கவுண்டி அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 364 /7 ரன்களுக்கு டிக்ளர் செய்துள்ளனர்.
இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 98 பந்துகளில் 67 ரன்களை விளாசினார். இதே போல மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 56 ரன்களை குவித்து அசத்தினர். ஆனால் இவர்கள் இருவருமே 2 முறை பேட்டிங் செய்து தான் இந்த ஸ்கோரை அடிக்க முடிந்தது.
2ஆவது இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா டக் அவுட்டாகி வெளியேறினார். இதே போல ஸ்ரேயாஸ் ஐயரும் 30 ரன்களை அடித்திருந்த போது நவ்தீப் சைனியால் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். எனினும் இருவருக்கும் பேட்டிங் பயிற்சி தேவை என்பதால், 2ஆவது வாய்ப்பு கொடுக்கப்பட்டு அரைசதம் அடித்தனர்.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது. ஜூலை 1இல் நடக்கும் கடைசி போட்டியில் வென்றுவிட்டால் 4ஆவது முறையாக இங்கிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றிவிடலாம். எனினும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா உறுதியாகியுள்ளதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.