மீண்டும் வநிந்து ஹசரங்காவுக்கு தடை; பின்னடைவை சந்தித்த இலங்கை!
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
இதையடுத்து வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி சிலெட்டில் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கபட்டது. இதில் கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வநிந்து ஹசரங்கா தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்று மீண்டும் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது வநிந்து ஹசரங்கா களநடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், மூன்று கரும்புள்ளிகளையும் அபராதமாக விதிக்கப்பட்டது. ஏற்கெனவே கடந்த ஆஃப்கானிஸ்தான் தொடரின் போது அவருக்கு இரண்டு கரும்புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டதுடன், இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் மூன்று கரும்புள்ளிகளை வநிந்து ஹசரங்கா பெற்றுள்ளதால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி அவருக்கு தடைவிதித்துள்ளது. தற்போது தான் வநிந்து ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை திரும்ப பெற்று கம்பேக் கொடுக்க காத்திருந்த நிலையில், தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.