ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப்-10ல் நுழைந்த ரிஷப் பந்த், ஸ்காட் போலண்ட்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் டாப்-5 ல் எந்தவொரு மாற்றமும் இல்லை. இதில் ஜோ ரூட், ஹாரி புரூக், கேன் வில்லியம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடரில் அபாரமாக விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா 3 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேற்கொண்டு இலங்கையின் கமிந்து மெண்டிஸ் 7ஆம் இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் பின் தங்கி 8ஆம் இடத்தை பிடித்த நிலையில், இந்திய வீரர் ரிஷப் பந்த் 3 இடங்கள் முன்னேறி 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இதுதவிர்த்து பாகிஸ்தானின் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா ஆகியோரும் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் ரன்களை சேர்க்க தவறியதன் காரணமாக பின்னடைவை சந்தித்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் இரண்டாம் இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 9ஆம் இடத்தை பிடித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேறி டாப்-10ல் நுழைந்துள்ளார்.