கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா சாதனையை சமன் செய்த மெக்முல்லன்!

Updated: Sun, Jun 16 2024 09:44 IST
கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா சாதனையை சமன் செய்த மெக்முல்லன்! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது பிராண்டன் மெக்முல்லன், கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன், ஜார்ஜ் முன்ஸி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக பிராண்டன் மெக்முல்லான் 60 ரன்களையும், ரிச்சி பெர்ரிங்டன் 42 ரன்களையும், ஜார்ஜ் முன்ஸி 35 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து அரைசதங்களையும் விளாசித்தள்ளினர். இதில் டிராவிஸ் ஹெட் 68 ரன்களுக்கும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 59 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 24 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த தோல்வியின் மூலம் ஸ்காட்லாந்து அணியாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறு வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. அதேசமயம் ஸ்காட்லாந்தின் இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணியானது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் பிராண்டன் மெக்முல்லன் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் பிராண்டன் மெக்முல்லன் 28 பந்துகளில் அரைசதம் கடந்ததன் மூலம், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்த ஸ்காட்லாந்து வீரர் எனும் வரலாற்று சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். 

அதேசமயம் இப்போட்டியில் 32 பந்துகளை எதிர்கொண்ட பிராண்டான் மெக்முல்லன் 2 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 60 ரனக்ளைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 6 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு முன், இந்த சாதனையை கிறிஸ் கெய்ல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மட்டுமே செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்தின் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக பிராண்டன் மெக்முல்லன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இந்த தொடரில் 3 இன்னிங்ஸ்களில் விளையாடி 70 சராசரி மற்றும் 170.73 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 140 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை