டி20 உலகக்கோப்பை: தொடரிலிருந்து விலகினார் ஜஸ்ப்ரித் பும்ரா; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் இறுதி கட்டமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அனைத்து இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது.
இருப்பினும் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற சமீபத்திய ஆசிய கோப்பையில் பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்தியா அதற்காக மனம் தளராமல் அடுத்ததாக உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
அதை தொடர்ந்து உலகக் கோப்பைக்கு முன்பாக சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்தியா முதல் போட்டியில் வென்று 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அப்போட்டியில் அனலாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் 106 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்காவை சுருட்டி வெற்றிபெற வைத்தனர்.
இருப்பினும் அப்போட்டியில் பங்கேற்க காத்திருந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் சந்தித்த காயத்தால் விலகுவதாக பிசிசிஐ அறிவித்தது. இது பற்றி நேற்றைய போட்டிக்கு முன் வெளியிட்ட செய்தி குறிப்பில் “செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய அணியின் வலைப்பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா முதுகு பகுதியில் காயமடைந்து வலியை உணர்ந்ததாக தெரிவித்தார். அவரை பிசிசிஐ மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. அதனால் முதல் போட்டியில் விலகுகிறார்” என்று கூறியது.
இருப்பினும் அந்த காயம் லேசானதாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 2வது போட்டியில் பங்கேற்பார் என காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவரது காயத்தை சோதித்துப் பார்த்து மருத்துவக்குழு காயம் பெரிய அளவில் இருப்பதால் நடைபெற்றுவரும் தென் ஆப்ரிக்க தொடர் மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையிலும் பங்கேற்க முடியாது என்று பிசிசிஐக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிலும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த காயம் குணமடைய 6 மாதங்கள் அவருக்கு தேவைப்படும் என்றும் மருத்துவக்குழு கூறியதாக தெரிகிறது. இது பற்றி பேசிய பிசிசிஐ அதிகாரி,“டி20 உலக கோப்பையில் பும்ரா நிச்சயம் விளையாடப்போவதில்லை. அவர் முதுகுப்பகுதியில் தீவிரமான காயத்தை சந்தித்துள்ளார். இது ஒரு மன அழுத்த முறிவு என்பதால் அவர் 6 மாதங்களுக்கு அணியிலிருந்து வெளியேறி இருக்கலாம்” என்று கூறினார்.
மேலும் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை கேட்ட இந்திய ரசிகர்கள் தலையில் விழுந்ததுபோல் சமூக வலைதளங்களில் சோகத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான ஆக்ஷனால் பேட்ஸ்மேன்களை திணறடித்து நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த அவர் இந்திய பந்துவீச்சு துறையின் மேட்ச் வின்னராகவும் பார்க்கப்படுகிறார்.
மேலும் பவர்பிளே, டெத் ஓவர்கள் என போட்டியின் அனைத்து சூழ்நிலைகளிலும் அபாரமாக பந்துவீசும் திறமை பெற்றுள்ள ஒரே இந்திய வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் அவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் இல்லாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதுபோக டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் போன்றவர்கள் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதுடன் 130 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசக்கூடியவர்களாக உள்ளனர்.
அதனால் டெத் ஓவர்களை சமாளிக்கவும் வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் ஈடு கொடுக்கவும் முழுக்க முழுக்க இவரை மட்டுமே நம்பியிருந்த இந்திய அணி நிர்வாகத்துக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் இந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இப்படி கடைசி நேரத்தில் காயத்தால் விலகிய அவருக்கு பதிலாக ஏற்கனவே ஸ்டேண்ட் பை லிஸ்டில் இடம் பிடித்திருந்த முகமது சமி அல்லது தீபக் சஹர் ஆகியோர் முதன்மை அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.