சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த பிராண்டன் டெய்லர்!
Brandon Taylor Record: சர்வதேச கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது ஜிம்பாப்வே வீரர் எனும் சாதனையை பிராண்டன் டெய்லர் படைத்துள்ளார்.
இலங்கை அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில் பென் கரண் மற்றும் சிக்கந்தர் ரஸா ஆகியோர் மீண்டும் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், மற்ற வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பென் கரண் 79 ரன்களையும், சிக்கந்தர் ரஸா 59 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதையடுத்து இலங்கை அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஜிம்பாப்வேவில் பிராண்டன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். அதன்படி, இப்போட்டியில் அவர், 20 ரன்களை எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 10ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்காக இந்த மைல் கல்லை எட்டும் மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இதற்குமுன், இந்த சாதனையை ஆண்டி ஃப்ளவர் மற்றும் கிராண்ட் ஃப்ளவர் ஆகியோர் மட்டுமே அடைந்தனர். ஆண்டி ஃப்ளவர் 320 இன்னிங்ஸ்களில் 11580 ரன்களையும், கிராண்ட் ப்ளவர் 10028 ரன்களையும் எடுத்துள்ளனர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அணியில் கம்பேக் கொடுத்துள்ள பிரண்டன் டெய்லர் இதுவரை பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.