இது உலகக்கோப்பை தொடர், இதில் இப்படியான அப்செட்கள் இருக்கும் - பிரண்டன் மெக்கல்லம்!

Updated: Thu, Oct 19 2023 13:19 IST
Image Source: Google

நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து மிகவும் அபாயகரமான அணியாக எல்லோராலும் பார்க்கப்பட்டது. அதற்கேற்ற வகையில் தான் அந்த அணியின் செயல்பாடுகளும் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என அவர்களை இந்த வடிவத்தில் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. நிறைய ஆல்ரவுண்டர்கள் மேலும் நீளமான பேட்டிங் லைன் அப் என்று அவர்கள் உலகில் எல்லோரையும் விளையாடுவதற்கு முன்பாகவே அச்சுறுத்தக் கூடியவர்களாக இருந்து வருகிறார்கள்.

இப்படியான இங்கிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பை தொடர் சிறப்பாக ஆரம்பிக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில், நியூசிலாந்து அணி இடம் ஒட்டுமொத்தமாக எல்லா துறைகளிலும் தோற்று இங்கிலாந்து சரணடைந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து கிரிக்கெட் உலகம் மீளாத நேரத்தில், இதைவிட மிக மோசமாக விளையாடி ஆஃப்கானிஸ்தான் அணியிடம் அதுவும் சிறிய மைதானத்தில் தோற்றது. 

இதுவரை நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் சிறிய அணிக்கு எதிராக மிக மோசமான தோல்வியாக இது பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் மும்பை வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாட இருக்கிறது. நெதர்லாந்து அணியிடம் தோற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கும் இது மிகவும் முக்கியமான ஒரு போட்டியாக அமைந்திருக்கிறது. 

உலகக் கோப்பை தொடரில் இந்த வாரத்தில் இது முக்கியமான போட்டி ஆகும். இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு மட்டும் பயிற்சியாளராக இருந்து வரும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம், இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்த பிறகு முதல்முறையாக அது குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர்,  “இங்கிலாந்து போட்டிக்கு வரும். இப்பொழுதுதான் தொடர் ஆரம்பித்து இருக்கிறது. இந்தத் தொடர் மெதுவாக எரிய ஆரம்பிக்கும். எனவே அவர்களுக்கு நிறைய நேரமும் போட்டியும் இருக்கிறது. இது உலகக்கோப்பை தொடர். இதில் இப்படியான அப்செட்கள் இருக்கும். ஒரு பெரிய தொடரில் நீங்கள் விரும்புவதும் இதைத்தான்.நிச்சயமாக இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் வெல்லவே நினைத்திருக்கும். 

ஆனால் நாம் விரும்பும் வகையில் விளையாட்டு செல்லாது. சில நேரங்களில் நீங்கள் சவால்களை சமாளிக்க வேண்டும். பின்னர் நீங்கள் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை காட்ட வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம், இங்கிலாந்து கடந்த இரண்டு உலகக் கோப்பைகளை வென்றதற்கு பின்னால் நல்ல காரணங்கள் இருக்கிறது. வீரர்களின் தரம் மற்றும் அவர்கள் விளையாடும் விதத்தில்தான், அவர்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாகவும் அணிகளாகவும் மாற்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை