ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

Updated: Mon, May 20 2024 20:14 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளன. அதேசமயம் ஐபிஎல்தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன. 

இந்நிலையில் சமீபத்தில் ரோஹித் சர்மா, கேகேஆர் அணிக்கெதிரான போட்டியின் போது அந்த அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயரிடம் பேசும் காணொளியானது இணையத்தில் தீயாய் பரவியது. இதைத்தொடர்ந்து ரோஹித், மும்பை அணி வீரர் தவால் குல்கர்னியுடன் பேசும்போது ஒளிபரப்பாளர்கள் ரோஹித் பேசுவதைப் பதிவு செய்ய, அதனை அறிந்து ரோஹித் சர்மா 'தயவு செய்து இங்கயும் வந்து எடுக்க வேண்டாம்' என்பதுபோல் கையெடுத்துக் கும்பிட்டிக் கேட்டிந்தார். 

அக்காணொளியும் இணையத்தில் வைரலான நிலையில், நேற்றைய தினம் ரோஹித் சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக, இப்போதெல்லாம் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைக்குள் கேமாராக்கள் அதிகமாக ஊடுருவி வருகிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் கருத்துக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்களது விளக்கத்தைக் கொடுத்துள்ளது. 

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மே 16 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மா அவரது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் காணொளி பதிவு செய்யப்பட்டது. அவரது உரையாடலின் ஆடியோ பதிவு செய்யப்படவும் இல்லை, அதனை நாங்கள் ஒளிபரப்பவும் இல்லை. அந்த காணொளியில், ரோஹித் சர்மா ஆடியோவை தயவு செய்து பதிவு செய்யாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

அதைத் தவிர்த்து வேறு எந்த ஒரு ஆடியோவும் பதிவு செய்யப்படவில்லை. ரோஹித் சர்மா தனது உரையாடலின் ஆடியோவை பதிவு செய்ய வேண்டாம் என்று கோரியதை மட்டும் காட்டும் காணொளி, போட்டிக்கு முந்தைய ஸ்டார் ஸ்போர்ட்ஸின் நேரடி ஒளிப்ரப்பில் இடம்பெற்றது. அதைதவிர்த்து நாங்கள் வேறு எந்த காணொளியையும் ஒளிபரப்பவில்லை. உலகம் முழுவதும் கிரிக்கெட்டை ஒளிபரப்பும் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எப்போதும் தொழில்முறை நடத்தையின் மிக உயர்ந்த தரத்தை கடைபிடிக்கிறது.

ஒளிபரப்பின் போது வீரர்களின் தனியுரிமைக்கான மரியாதையை நாங்கள் கொடுத்து வருகிறோம். அதுதவிர்த்து நாங்கள் எங்கள் தயாரிப்புகளில் எங்களது நெறிமுகளை கடைபிடிப்பது உறுதியுடன் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் இந்த அறிக்கையானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை