ஐபிஎல் 2023: தாண்டவமாடிய ப்ரூக்; கொண்டாடும் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 19வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு இளம் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் இம்முறை தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடினார். அவருடன் 46 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட மயங் அகர்வாலை 9 ரன்களில் அவுட்டாக்கிய ஆண்ட்ரே ரஸல் அடுத்து வந்த ராகுல் திரிபாதியையும் 9 ரன்களில் காலி செய்தார்.
இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். அதே வேகத்தில் 3வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 50 ரன்கள் குவித்த அவர் வருண் சக்கரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். அவரைப் போலவே மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட ஹாரி ப்ரூக் ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்தார். அவருடன் அடுத்து களமிறங்கிய அபிஷேக் சர்மா தனது பங்கிற்கு கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டு 4ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹைதராபாத்தை 200 ரன்கள் கடக்க வைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக விளையாடிய ஹரி ப்ரூக் 12 பவுண்டரி 3 சிக்சருடன் ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் சதமடித்து 100* ரன்கள் விளாசினார். குறிப்பாக ஹைதராபாத் அணிக்காக வெளியூரில் சதமடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்துள்ளார். அவருடன் கடைசி நேரத்தில் ஹென்றிச் க்ளாஸென் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 16 ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ஹைதராபாத் 228/4 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
A well made century from Harry Brook, finally some relief for him and SRH .#KKRvSRH pic.twitter.com/uDCrrzjsjj
— Sir BoiesX
இந்த தொடர் ஆரம்பிம்பதற்கு முன்னாகவே ஹைதராபாத் அணியில் பெரிய கோடிகளுக்கு வாங்கப்பட்ட அவர் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. ஆனால் இந்த தொடரில் முதல் 3 போட்டிகளிலும் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத அவர் சொற்ப ரன்களில் தடுமாறி அவுட்டானார். அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டுவதற்கு இது ஒன்றும் பாகிஸ்தானில் இருக்கும் தார் ரோட் பிட்ச் கொண்ட தொடர் கிடையாது என்று அவரை கலாய்த்தனர். இருப்பினும் இந்த போட்டியில் சற்று பேட்டிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக சதமடித்த அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதனை ரசிகர்களும் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.