மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நெற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, வங்கதேச மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேசமகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
அதன்படி, முதலில் விளையாடிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, கேப்டன் நிகர் சுல்தானா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் 57 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் பெத் மூனி சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த அலிசா ஹீலி - கேப்டன் மெக் லெனிங் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹீலி 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் கடைசி வரை களத்தில் இருந்த மெக் லெனிங் 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி பெறும் 2ஆவது வெற்றி இதுவாகும்.