பும்ராவின் பதவி தனக்கு ஆச்சரியமாக உள்ளது - சரண்தீப் சிங்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே வரும் ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அந்த 18 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் புதிய கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கே.எல் ராகுல் நிச்சயம் இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போன்று அவருக்கு அடுத்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இந்திய அணியின் துணை கேப்டன் வரிசையில் இருந்த வேளையில் பும்ராவிற்கு இந்த பதவியை பி.சி.சி.ஐ வழங்கி உள்ளது.
மேலும் இந்திய அணியில் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை எப்போதுமே பேட்ஸ்மேன்கள் தான் அணியின் கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வரும் வேளையில் நீண்ட நாள் கழித்து ஒரு பவுலருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் தேர்வுகுழு தலைவர் சரன்தீப் சிங், “இந்திய அணியை வழிநடத்தவுள்ள கேஎல் ராகுல் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, ஆனால் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் துணை கேப்டனாக பெயரிடுவது முற்றிலும் வேறுபட்டது. ஏனெனில் அவர் எல்லையில் இருந்து வந்து பங்கேற்பது கடினம். ஒவ்வொரு பந்து அல்லது அதற்கு பிறகும் மைதானத்தில் சகவீரர்களைச் சந்திப்பது கடினமான ஒன்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.