ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!

Updated: Tue, Jan 28 2025 21:23 IST
Image Source: Google

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வுசெய்து ஐசிசி அறிவித்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி கடந்த ஆண்டில் ஜஸ்பிரித் பும்ரா 13 டெஸ்ட் போட்டிகளில் 357 ஓவர்கள் வீசி 14.92 என்ற சராசரியுடன் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலக் கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகவும் ஜஸ்பிரித் பும்ரா சதனை படைத்ததார்.

மேற்கொண்டு நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்தார். இதன் காரணமாக தற்போது அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணி தரப்பில் ஐசிசி சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை விருதை வென்ற ஐந்தாவது வீரர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் பும்ரா பெற்றுள்ளார். 

இதற்கு முன் கடந்த 2004ஆம் ஆண்டு ராகுல் டிராவிட்டும், 2010ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும், 2016ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வினும், 2017ஆம் ஆண்டு விராட் கோலியும் என இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் வென்ற பும்ரா, ஐசிசி டி20 அணி மற்றும் டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் கடந்த 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி ரேச்சல் ஹேஹோ ஃபிளின்ட் கோப்பை விருதை நியூசிலாந்து ஆல் ரவுண்டர் அமெலியா கெர் வென்றுள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெலியா கெர் நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தார். மேற்கொண்டு கடந்தாண்டு டி20 கிரிக்கெட்டில் 387 ரன்கள் மற்றும் 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள அமெலியா கெர், 224 ரன்களையும், 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். முன்னதாக 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி வளர்ந்து வரும் வீராங்னை விருது மற்றும் ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீராங்னை விருது ஆகியவற்றையும் அமெலியா கெர் வென்றதுடன், ஐசிசி டி20 அணி மற்றும் ஒருநாள் அணியிலும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::