ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி 2024: ஜெய்ஸ்வால், ஜடேஜா, பும்ராவுக்கு இடம்!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024 ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்தியாவைச் சேர்ந்து 3 வீரர்களும், இங்கிலாந்தைச் சேர்த்த 4 வீரர்களும் இடம்பிடித்துள்ளன.
அந்தவகையில் ஐசிசி தேர்வு செய்துள்ள இந்த டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களாக இந்திய அனியின் இளம் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலாந்தின் பென் டக்கெட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு மூன்றாம் வரிசையில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 4 மற்றும் 5ஆம் இடங்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
மேற்கொண்டு அணியின் ஆல் ரவுண்டர் வரிசையில் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ், அணியின் விக்கெட் கீப்பராக இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் மற்றொரு ஆல் ரவுண்டராக இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதுதவிர்த்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், நியூசிலாந்தின் மேட் ஹென்றி மற்றும் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் ஐசிசி அறிவித்துள்ள இந்த அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்தியா அணியின் நட்சத்திர வீரர்கள் இடம்பெறவில்லை. அதேசமயம் தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமாவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதவிர்த்து தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகளில் இருந்து எந்தவொரு வீரரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி 2024: பென் டக்கெட் (இங்கிலாந்து), யஷஸ்வி ஜெய்ஸ்வா (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஜோ ரூ, ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித் (இங்கிலாந்து), கமிந்து மெண்டிஸ் (இலங்கை), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), பாட் கம்மின்ஸ் (கேப்டன், ஆஸ்திரேலியா), மேட் ஹென்றி (நியூசிலாந்து), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா).
Also Read: Funding To Save Test Cricket