ENG vs IND: இந்திய அணியை வழிநடத்தும் ஜஸ்ப்ரித் பும்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தள்ளிவைக்கப்பட்ட 5ஆவது டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மீதமுள்ள 5ஆவது மற்றும் கடைசி போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர், லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டபோது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மாவுக்கு இன்று மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவருக்கு கரோனா பாசிட்டிவ் என்று முடிவுகள் வரவே, போட்டியிலிருந்து அவர் விலக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கபில் தேவுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். 1987 ஆம் ஆண்டில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக வழிநடத்தினார். இதையடுத்து 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அணியை வழிநடத்தும் சூழல் உருவாகியுள்ளது. பும்ரா 29 டெஸ்ட் போட்டிகளில் 123 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த ரோஹித் வெளியேறியதால், அனுபவம் வாய்ந்த சேதேஷ்வர் புஜாரா, இளம் வீரர் சுப்மான் கில்லுடன் பேட்டிங்கைத் தொடங்க நல்ல வாய்ப்பு உள்ளது. மயங்க் அகர்வால் ரோஹித்துக்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ளார் என்றும், ஆடும் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை இல்லை என்றும் பிசிசிஐ வட்டாரத்தில் பேசப்படுகிறது.