மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி விளக்கமளித்த ஜோஸ் பட்லர்; கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

Updated: Mon, Oct 10 2022 18:26 IST
Buttler Defends Call To Not Appeal For Obstruction Against Mathew Wade In First T20I (Image Source: Google)

டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது. பெர்த்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் (68) மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸின் (84) அதிரடியால் 20 ஓவரில் 208 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

209 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் அதிரடியாக பேட்டிங்  ஆடி 44 பந்தில் 73 ரன்களை குவித்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 15 பந்தில் 35 ரன்களை விளாசினார். ஆனாலும் ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 200 ரன்கள் மட்டுமே அடித்து இலக்கை எட்டமுடியாமல் 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் மேத்யூ வேட் படுமட்டமாக நடந்துகொண்டார். பொதுவாக ஆஸ்திரேலியர்கள் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் மேத்யூ வேட். இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை மார்க் உட் வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தை பவுன்ஸராக வீசினார் மார்க் உட். அதை வேட் அடிக்க, பந்து அங்கேயே உயரே எழும்பியது. விக்கெட் கீப்பர் பட்லர் மற்றும் பவுலர் மார்க் உட் இருவருமே அந்த பந்தை கேட்ச் பிடிக்க ஓடிவந்தனர். 

பந்து எங்கே சென்றது என்பதை அறியாத வேட் ரன் ஓட முயற்சித்து இரண்டு அடி முன்னே சென்றார். பின், மார்க் உட் ஓடிவருவதை பார்த்து, மீண்டும் க்ரீஸை நோக்கி ஓடிவந்தார். அப்போது மார்க் உட் ஏதோ ஒருவகையில் தன்னை அவுட்டாக்க(கேட்ச் பிடிக்கத்தான் வருகிறார் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை) ஓடிவருகிறார் என்பதை தெரிந்துகொண்டு கையை நீட்டி மார்க் உட்டை தடுத்தார்.

இதையடுத்து பட்லர், மார்க் உட் உட்பட மொத்த இங்கிலாந்து அணியும் அதிருப்தியடைந்தது. ஆனால் அம்பயரிடம் அப்பீல் செய்யவில்லை. ஒருவேளை அப்பீல் செய்திருந்தால் விதிப்படி வேட் அப்போதே ஆட்டமிழந்திருப்பார்.  ஆனால் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அப்பீல் செய்யவில்லை.

அதற்கான காரணம் குறித்து பேசிய ஜோஸ் பட்லர், “டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இப்படி நடந்திருந்தால் நான் முறையீடு செய்திருக்கலாம். இந்த ஆட்டத்தின்போது முறையீடு செய்கிறீர்களா என என்னைக் கேட்டார்கள். இல்லை எனக் கூறிவிட்டேன். இப்போதுதான் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளேன். எனவே தொடர்ந்து விளையாடலாம் என நினைத்தேன். 

என்ன நடந்தது என்று நான் சரியாகப் பார்க்கவில்லை. எதற்காக முறையிட வேண்டும் எனத் தெரியவில்லை. நான் பந்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். மற்றவர்களிடம் சரியாகப் பார்த்தீர்களா எனக் கேட்டிருக்கலாம். ஆனால் முறையீடு செய்யாமல் தொடர்ந்து விளையாடவே எண்ணினேன்” என்று தெரிவித்தார். 

பட்லர் கூறிய இந்த காரணம், மேத்யூ வேடின் செயலை விட மட்டமாக இருந்தது. அண்மையில், மகளிர் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா மன்கட் ரன் அவுட் செய்தபோது, ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் என்று வீண் விவாதம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட்டர்கள், மேத்யூ வேட் விஷயத்தில் மௌனம் காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை