பயிற்சி எடுக்க போதிய நேரமில்லை - ஜோஸ் பட்லர்!

Updated: Mon, Jul 25 2022 18:22 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி 24 நாட்களில் 12 டி20 போட்டிகள் 9 ஒருநாள் போட்டிகள் விளையாடி உள்ளது. அதிலும் கடந்த இரண்டு வாரத்தில் 6இல் இரண்டு ஒருநாள் போட்டிகள் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது முக்கியமான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் 1-1 என தொடர் சமநிலையில் முடிந்தது. இந்நிலையில் இத்தொடர் முடிவடைந்த பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், பயிற்சி செய்ய நேரமில்லாததால் விரக்தியாக உள்ளதென தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது போல தீவிரமான மனநிலை தற்போது இல்லை. முதல் 20 ஓவரில் 10 ஓவரில்தான் நாங்கள் அதே உற்சாகத்துடன் இருந்தோம். ஒரு அணியாக எங்களை நாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்விகள் குறித்து கவலைப்படாமல் போட்டி மனப்பான்மையுடன் எங்களது விளையாட்டினை தீவிரமாகவும் சிறப்பாகவும் விளையாடுவோம். 

இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு போட்டிகள் விளையாடியது ஆச்சரியமாக உள்ளது.  கடினமான ஒன்றுதான். பயிற்சி எடுக்க போதிய நேரமில்லாமல் இருந்தது உண்மையில் விரக்தியாக இருந்தது. வீரர்களுடன் உரையாட வேண்டும், ஓய்வு எடுக்க வேண்டும், பயிற்சி எடுக்க வேண்டும் என நேரமே இல்லை. இருப்பினும் அணியாக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதுவும் ஒரு சவாலாகத்தான் இருந்தது. 

முறையாக பயிற்சி செய்தால் கிரிக்கெட்டில் ஒரு உயர்ந்த படிநிலையை இங்கிலாந்து அணியினால் உருவாக்க முடியும். இந்த குறிக்கோளை நோக்கி இனிமேல் பயணம் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே பணிச்சுமை காரணமாகத் தான் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என இங்கிலாந்து நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்து, ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது இங்கிலாந்து கேப்டனும் அதேபோல் கருத்தை முன்வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை