மீண்டும் விபத்தில் சிக்கிய கிளென் மேக்ஸ்வெல்; விசாரணையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

Updated: Mon, Jan 22 2024 20:34 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இத்தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் திடீரென பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

அவருக்கு பதிலாக அறிமுக வீரர்கள் பிரெசர் மெக்கர்க், ஸேவியர் பார்ட்லெட் ஆகியோர் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் மது அருந்தியிருந்ததால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் அடிப்படையில், சில தினங்களுக்கு முன் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டு முன்னாள் ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர் ப்ரெட் லீ நடத்தி வரும் "சிக்ஸ் அண்ட் அவுட்" எனும் இசைக்குழுவின் கச்சேரியில் பங்கேற்றதாகவும், அப்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுதுள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து தெரிந்த பிறகே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓய்வு கொடுத்து அணியிலிருந்து நீக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேக்ஸ்வெல்லின் விபத்து குறித்த காரணங்களை ஆராய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளென் மேக்ஸ்வெல்லின் சம்பவம் குறித்து நேற்றைய தினமே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியும். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அதேசமயம் கிளென் மேக்ஸ்வெல் டி20 தொடருக்கு முன்பாக அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்து எந்த தகவலும் தற்போது தெரிவிக்கப்படாது” என குறிப்பிட்டுள்ளது. 

முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக கொல்ஃப் விளையாட்டின் போது காயமடைந்த அவர், காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியதுடன் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் மேக்ஸ்வெல் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் தலைவலியை உருவாக்கி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை