யு-19 தேர்வாகததால் இரண்டு மணி நேரம் அழுதேன் - சுயாஷ் சர்மா!
16அவது சீசன் ஐபிஎல் தொடரில் 19 வயதான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் லெக் ஸ்பின்னர் சுயாஷ் சர்மா அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். மாநில அணிக்கான உள்நாட்டுப் போட்டிகளில் எந்த கிரிக்கெட் வடிவத்திலும் விளையாடாமல் நேரடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குள் இடம் பிடித்து ஐபிஎல் விளையாடும் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் திறனறியும் குழு நடத்திய முகாமில் 25 நாட்கள் கலந்து கொண்டு பந்து வீசி பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் கவனத்தை ஈர்த்து அணியில் இடம் பிடித்திருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் எட்டு ஆட்டங்களில் விளையாடி 10 விக்கட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இவரது எக்கனமி எட்டு ஆகும்.
சமீபத்தில் சுயாஷ் சர்மா அளித்துள்ள பேட்டியில், “கடந்த ஆண்டு அண்டர் 19 அணி தேர்வுக்கான தகுதிப்போட்டிகளில் பந்து வீசினேன். ஆனால் நான் தேர்வு செய்யப்படவில்லை. பின்னர் தேர்வுக்குழு 1 மணிக்குள் ஒரு பட்டியலை வெளியிட்டார்கள். அந்தப் பட்டியலில் எனது பெயர் இல்லை. தூங்கி எழுந்து சென்று போய் பார்த்தேன். அதற்குப் பிறகு நான் 2 மணி நேரங்கள் மூன்று மணி வரை அழுதேன். நான் பந்து வீசுவதை அவர்கள் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். நான் வீசிய பின்பு அது அவர்களுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறினார்கள்.
நான் அழுது கொண்டே வீட்டிற்குத் திரும்பி வந்தேன். பின்பு எனது தலையை மொட்டை அடித்துக் கொண்டேன். நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தேன். நான் சிறப்பாகச் செய்தும் எனக்கானது நடக்கவில்லை. இதுதான் அப்பொழுது நடந்தது. ஐபிஎல் தேர்வுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சி முகாமில் நான் பாராட்டுகளைப் பெற்றேன். ஆனால் அது தேர்வுக்கு வழி வகுக்குமா என்று தெரியவில்லை.
நான் ஐபிஎல் ஏலத்தின் பொழுது 25 நாள் முகாமில் இருந்து வீடு திரும்பி கொண்டு இருந்தேன். நான் ரிக்ஷாவில் வந்து கொண்டிருந்த பொழுது ஒரே அழைப்பு வெள்ளமாக அலைபேசியில் வந்தது. அப்போது நான் அநேகமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். அப்பொழுது என் தந்தை விமான நிலையத்தில் இருந்தார். அவர் அழுது கொண்டிருந்தார். அந்த உணர்வை விவரிக்க முடியாது. நான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று நினைக்கவே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.