நான் ஓப்பனிங் இடத்தில் இருந்து வெளியேறவும் தயார் - இஷான் கிஷான்!

Updated: Fri, Jun 10 2022 20:34 IST
Image Source: Google

இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அதிரடியான தொடக்க வீரராக பார்க்கப்படும் இஷான் கிஷன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்திய அணியில் இடம்பிடித்து வருகிறார். 

ஆனாலும் இந்திய டி20 அணியில் முதன்மை துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் இருப்பதனால் இவரது துவக்க வீரருக்கான இடத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. எனவே அவ்வப்போது இஷான் கிஷன் மிடில் ஆர்டரிலும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாலும், ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாலும் தற்போது துவக்க வீரராக விளையாடி வரும் இஷான் கிஷன் மிகச் சிறப்பான ஆட்டத்தை முதல் போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் 48 பந்துகளில் 11 பவுண்டரி 3 சிக்ஸர் என 76 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அவரது இந்த பிரமாதமான ரன் குவிப்பால் இந்திய அணி 211 ரன்கள் என்கிற மிகப்பெரிய ரன்களை எட்டியது. துவக்கத்தில் இப்படி அதிரடியான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தும் துவக்க வீரர் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணி பெரிய ரன் குவிப்பில் ஈடுபடும். அந்த வகையில் இஷான் கிஷன் இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்று அதிரடியாக விளையாடுவார் என்று நம்பலாம். 

ஆனால் இந்திய அணியில் மீண்டும் ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் திரும்பினால் அவரது இடம் ஓப்பனிங்கில் கிடைக்குமா? அல்லது மிடில் ஆர்டரில் கிடைக்குமா? என்பதே கேள்வியாக உள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இஷான் கிஷன் தனக்காக ரோகித்தையோ அல்லது ராகுலையோ ஓப்பனிங் இடத்தில் இருந்து நீக்க வேண்டாம் என்று உருக்கமாக பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசியா அவர், “இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விளையாடி வரும் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்து மிக அற்புதமாக விளையாடி பெரிய அளவில் ரன்களை குவித்துள்ளனர்.

அவர்கள் அணியில் இருக்கும் போது எனக்காக அவர்களின் இடத்தை நான் எப்போதும் கேட்க மாட்டேன். நான் அணியில் எப்போதும் இணைந்திருக்கவே விரும்புகிறேன். அவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் விளையாட முடியாத பட்சத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதுவே போதும். என்னுடைய வேலை எல்லாம் பயிற்சியில் சிறப்பாக செயல்பட வேண்டும். அதனை தொடர்ந்து எனக்கு கொடுக்கப்படும் இடங்களில், கொடுக்கப்படும் வாய்ப்புகளில் என்னை நிரூபிக்க வேண்டும் இது மட்டுமே எனது நினைப்பாக உள்ளது.

ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் வந்தால் நான் ஓப்பனிங் இடத்தில் இருந்து வெளியேறவும் தயார். நிச்சயம் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி என்னுடைய திறமையை நிரூபிப்பேன். அதோடு இந்திய அணி என்னை எங்கு உபயோகிக்க நினைக்கிறதோ அந்த இடத்தில் விளையாட நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை