என்னுடைய எண்ணம் எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றார் போன்று செயல்படுவது மட்டும்தான் - ஹர்திக் பாண்டியா!

Updated: Wed, Apr 26 2023 13:46 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தின. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திதது.
 
வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “என்னுடைய எண்ணம் எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றார் போன்று செயல்படுவது மட்டும்தான். டி20 போட்டிகள் என்பது இரண்டு பந்துகளிலேயே மாறக்கூடிய ஒன்று. இரண்டு சிக்ஸர்கள் சென்றால் கூட உங்களது மனநிலை மாறிவிடும். ஆனால் நான் கேப்டன்சி செய்யும்போது எனக்கு உள்ளுணர்வு என்ன தோன்றுகிறதோ அதையே செய்து வருகிறேன்.

இன்றைய போட்டியிலும் ரஷீத் கான் மற்றும் நூர் அகமது ஆகியோரை கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் ஆகியோருக்கு எதிராக பயன்படுத்த நினைத்தேன். ஏனெனில் அவர்களைப் போன்ற பவர் ஹிட்டர்கள் வேகப்பந்து வீச்சாளர்களை எளிதாக விளையாடி விடுவார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களை அவர்கள் கணிப்பது கடினம்.

எனவே வேகப்பந்து வீச்சாளர்களை மற்ற வீரர்களுக்கு எதிராகவும், சுழற்பந்து வீச்சாளர்களை அவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தினேன். அதன்படி நாங்கள் வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் சிம்பிளாக இருந்தாலும் அது இந்த மைதானத்தில் சிறப்பாக எடுபட்டது. நாங்கள் மும்பை அணியும் வீழ்த்தினோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை