ஐசிசி உலகக்கோப்பை 2023: கோப்பையுடன் புகைப்படம் எடுத்த கேப்டன்கள்!
இந்தியாவில் நாளை முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்த தொடர் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடக்க விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து கேப்டன்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி மட்டும் இன்று குஜராத் கிரிக்கெட் சங்க கிளப்ஹவுஸில் நடந்தது. இதில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டு கிரிக்கெட் வர்ணனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
அதன் பிறகு அனைத்து அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக இணைந்து உலகக் கோப்பை டிராபியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையின் போது இருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பையிலும் அணி நடத்துகிறார்.
இதையடுத்து நாளை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், கடந்த முறை இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.