மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய 8அணிகள் பங்கேற்கொற்கவுள்ளன. அதன்படி ஜூலை 19ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் மற்றும் யுஏஇ அணியும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் குரூப் அட்டவணையில் டாப் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு சமீபத்தில் இத்தொடருக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டிருந்தது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் யுஏஇ மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணிக்கு நட்சத்திர வீராங்கனை சமாரி அத்தப்பத்து கேப்டனாக தொடர்கிறார்.
இந்த அணியில் விக்கெட் கீப்பர் அனுஷ்கா சஞ்சீவனி, இடது கை வேகப்பந்து வீச்சாளர் உதேஷிகா பிரபோதனி மற்றும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் அச்சினி குலசூரிய உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளுடன், இளம் வீராங்கனைகள் விஷ்மி குணரத்னே, ஷஷினி கிம்ஹானி உள்ளிட்ட வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கை மகளிர் அணி: சமாரி அத்தபத்து (கே), விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோதனி, அச்சினி குலசூரியா, இனோஷி பிரியதர்ஷனி, காவ்யா கவிந்தி, சச்சினி நிசன்சலா, ஷஷினி கிம்ஹானி, அம காஞ்சனா.