CT 2025: தொடரில் இருந்து விலகிய ஃபகர் ஸமான்; மாற்று வீரரை அறிவித்தது பாகிஸ்தான்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நேற்று பாகிஸ்தானில் கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணியானது 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்படி இன்னிங்ஸின் முதல் ஓவரை ஷாஹீன் அஃப்ரிடி வீசிய நிலையில், அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட வில் யங் கவர் திசை நோக்கி அடித்தார். அப்போது பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்கும் முயற்சியில் ஃபகர் ஸமான் ஈடுபட்டார்.
அப்போது பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்கும் முயற்சியில் ஓடிய ஃபகர் ஸமான் பவுண்டரியை தடுத்து நிறுத்திய நிலையில் காயத்தை எதிர்கொண்டார். அதன்பின் அவருக்கு வலி அதிகமாக, அணி மருத்துவர்கள் களத்திற்கு வந்த அவரை பரிசோதித்தனர். பின்னர் காயம் காரணமாக ஃபகர் ஸமான் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். மேற்கொண்டு அவருக்கு பதிலாக காம்ரன் குலாம் ஃபீல்டிங் செய்ய களத்திற்கு வந்தார். மேலும் அந்த இன்னிங்ஸ் முழுவது ஃபகர் ஸமான் ஃபீல்டிங் செய்ய வரவில்லை.
அதன்பின் பேட்டிங்கில் வழக்கத்திற்கு மாறாக 4ஆம் இடத்தில் களமிறங்கிய ஃபகர் ஸமான், பேட்டிங்கிலும் அசௌகரியமாக காணப்பட்டதுடன், 24 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து ஃபகர் ஸமான் விலகியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஃபகர் ஸமானுக்கு மாற்று வீரராக மற்றொரு இடதுகை தொடக்க வீரர் இமாம் உல் ஹக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே அந்த அணியில் இளம் வீரர் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியதனால் ஃபகர் ஸமான் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரும் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தயப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி.