அடுத்த ஆட்டத்தில் முதல் பந்திலிருந்து செயல்பட முயற்சிப்பது முக்கியம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முலான்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங் 30 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் தரப்பில் ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸின் அபாரமான பந்துவீச்சின் காரணமாக அந்த அணி 15.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 95 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்த வெற்றியால் நாம் அதிகமாகப் பாராட்டப்படாமல், பணிவாக இருப்பது முக்கியம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டி குறித்து வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம். நான் என் உள்ளுணர்வை ஆதரித்துக்கொண்டிருந்தேன். பந்து கொஞ்சம் திரும்புவதைக் கண்டேன், அதனால் சஹாலிடம் ஆட்டத்தை கட்டுப்படுத்தச் சொன்னேன். ஏனெனில் இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது, சரியான வீரர்கள் சரியான இடங்களில் இருந்தனர். இப்போது பேசுவது கடினம், இதுபோன்ற வெற்றிகள் எங்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது.
இந்த போட்டியில் வீரர்கள் ஸ்வீப் செய்வது கடினமாக இருந்தது. மேற்கொண்டு விக்கெட்டில் மாறி மாறி பவுன்ஸ் இருந்தது, உண்மையைச் சொல்லப் போனால், 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைப் பார்க்கும்போது, நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை எடுத்ததாக நினைக்கிறேன். மேலும் பந்துவீச்சாளர்கள் எங்களுடைய திட்டங்களுக்கு ஏற்ப சிரப்பாக செயல்பட்டனர். அதிலும் முதலிரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு உத்வேகமளித்தது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தை முன்னோக்கி எடுத்து சென்றனர். அச்சமயத்தில் சஹால் பந்தை திருப்புவதைப் பார்த்தபோது, எங்கள் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தன. இறுதியில் நாங்கள் எதிர்பார்த்தது நடந்தது. அதேசமயம் இந்த வெற்றியால் நாம் பணிவாக இருப்பது முக்கியம், அதிகமாகப் பாராட்டப்படக்கூடாது. மேலும் அடுத்த ஆட்டத்தில் முதல் பந்திலிருந்து செயல்பட முயற்சிப்பது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.