நாங்கள் பழகியதை விட இந்த விக்கெட் மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தது - டெம்பா பவுமா!
ஐசிசி சமபியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டன் 103 ரன்களையும், அணியின் கேப்டன் டெம்பா பவுமா 58 ரன்களையும், ரஸ்ஸி வேன்டர் டுசென் மற்றும் ஐடன் மார்க்ரம் தலா 52 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 90 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா, “ ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்திறன். விக்கெட்டைப் பற்றி தெரியாமல் முதலில் பேட்டிங் செய்ய துணிச்சலான முடிவை எடுத்தோம். அதேபோல் நங்கள் பந்துவீச்சிலும் சிறப்பான செயல்திறனைக் கொண்டிருந்தோம். நாங்கள் பாகிஸ்தானில் பழகியதை விட இந்த விக்கெட் மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தது.
Also Read: Funding To Save Test Cricket
முன்னணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால், நாங்கள் நல்ல ஸ்கோரைப் பெற முடிந்தது. பின் வரிசையில் உள்ள வீரர்களும் ஆட்டத்தை எடுத்து சென்ற விதத்தை எண்ணி பெருமை கொள்கிறேன். பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒரே லெந்தில் பந்துவீச்சில் எதிரணியை அழுத்தத்தில் தள்ளினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் நாங்கள் இதே போல் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.