வங்கதேச அணிக்காக எங்களிடம் சில திட்டங்கள் உள்ளன - மிட்செல் சாண்ட்னர்!

Updated: Sun, Feb 23 2025 21:32 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி தங்கள் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் வங்கதேச அணி கடுமையாக போராடிய நிலையிலும் இந்திய அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியில் விளையாடுகிறது.

மேலும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இப்போட்டி முக்கியமானது என்பதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஷகிப் அல் ஹசன் இல்லாத போதிலும் வங்கதேசம் ஆபத்தான அணியாகவே உள்ளது என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய மிட்செல் சாண்ட்னர், “வங்கதேச அணிக்காக எங்களிடம் சில திட்டங்கள் உள்ளன, ஆனால் விக்கெட் எப்படி விளையாடுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அது தட்டையாக இருந்தால், நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அவர்களிடம் எப்போதும் வலுவான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் இப்போது அவர்களிடம் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

தஸ்கின் அஹ்மத் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார், முஸ்தஃபிசூர் ரஹ்மானால் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பது எங்களுக்குத் தெரியும், மேலும் இளம் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணாவும் ஒரு அற்புதமான வீரராக தெரிகிறார். மேலும் நாளை நாங்கள் விளையாடும் மைதானம் பாரம்பரியமாக அதிக ஸ்கோரிங் மைதானமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே நாம் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும். 

Also Read: Funding To Save Test Cricket

ஏனெனில் இதுபோன்ற மைதானங்களில் எப்படிச் செயல்படுவது என்பது அவர்களுக்குத் தெரியும், நாங்களும் அவர்களுடன் நன்கு பரிச்சயமானவர்கள். இது எல்லாம் நமது திட்டங்களைச் செயல்படுத்துவது மற்றும் விரைவாகத் தகவமைத்துக் கொள்வது பற்றியது. ஏனெனில் அவர்களுடைய பேட்டிங் வரிசையிலும் சில அதிரடியாக விளையாடும் வீரர்களும் இருப்பதை நாங்கள் அறிவோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை