கம்பேக் கொடுக்க தயாராக உள்ளோம் - இணையத்தில் வைரலாகும் ரஹானே, புஜாராவின் பயிற்சி காணொளி!

Updated: Sat, Dec 30 2023 19:07 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இந்திய அணியின் கனவு மீண்டும் தகர்ந்துள்ளது.

முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் அடித்த அதே பிட்ச்சில் இந்தியா 245, 131 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான தோல்வியை சந்தித்தது. இதில் ஜெய்ஸ்வால், கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களும் அவர்களை விட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். 

உதனால் இந்த தோல்விக்கு அஜிங்கிய ரஹானே மற்றும் செட்டேஷ்வர் புஜாரா ஆகிய சீனியர்கள் இல்லாததே முக்கிய காரணம் என்று ஹர்பஜன் சிங் சமீபத்தில் விமர்சித்திருந்தார். மேலும் ரஹானே, புஜராவுக்கு சமமான அனுபவமிகுந்த வீரர்கள் இந்திய அணியில் இல்லை என்று தெரிவித்த ஹர்பஜன் ஒருவேளை அவர்கள் இருந்திருந்தால் இந்த போட்டியில் இந்தியா மோசமாக தோற்றிருக்காது என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இந்தியா படுதோல்வியை சந்தித்துள்ள இந்த சமயத்தில் வலைப்பயிற்சிகளை செய்யும் காணொளியை “ஓய்வு நாட்களுக்கு வேலையே இல்லை” என்ற தலைப்புடன் ரஹானே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதே போல “ரஞ்சி கோப்பைக்காக தயாராகிறேன்” என்ற தலைப்புடன் புஜாரா தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பயிற்சியை எடுக்கும் காணொளியை வெளியிட்டுள்ளார். 

 

அதாவது இப்போது சொன்னால் கூட உடனடியாக தென் ஆப்பிரிக்காவுக்கு பயணித்து 2ஆவது போட்டியில் விளையாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற வகையில் அவர்கள் மறைமுகமாக இப்படி பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள் என்றே சொல்லலாம். இருப்பினும் அதை பார்க்கும் ரசிகர்கள் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உங்களுக்கு கொடுத்த வாய்ப்புகள் போதும் என்ற கருதியே இளம் வீரர்களை நோக்கி இந்திய அணி நிர்வாகம் நகர்ந்ததை மறந்து விடாதீர்கள் என்று பதிலளித்து கலாய்த்து கொண்டு வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை