ENG vs IND, 5th Test: புஜாராவை பாராட்டி பேசிய சிராஜ்!
ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி தற்போது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதலில் இந்திய அணி 416 ரன்களைக் குவிக்க இங்கிலாந்து அணியானது 284 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக வலுவான முன்னிலை பெற்ற இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்சிலும் பெரிய ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 245 ரன்கள் மட்டுமே குவித்தது.
இந்த இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்காக பந்த் மற்றும் புஜாரா ஆகியோர் அரை சதமடித்தனர். அவர்களை தவிர மற்ற எந்த பேட்ஸ்மனும் பெரிய அளவில் கை கொடுக்காததனால் தற்போது இந்த போட்டியில் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாராவை இளம் வேகபந்துவீச்சாளரான முகமது சிராஜ் வெகுவாக பாராட்டி பேசி உள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “புஜாரா இந்திய அணியில் ஒரு போர் வீரர் போன்றவர். ஆஸ்திரேலியா போன்ற கடினமான மைதானங்களில் கூட இவர் செயல்பட்ட விதம் மிகவும் சிறப்பான ஒன்று. எப்போதெல்லாம் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அவருடைய பங்களிப்பு தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அணிக்காக களத்தில் நின்று அந்த கடினமான சூழ்நிலைகளையும் சமாளித்து அணிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார்.
அவருக்கு எதிராக வலைப்பயிற்சியில் பந்து வீசுவது கூட மிகவும் கஷ்டம். எப்பொழுதுமே அவர் பெரிதாக அடித்து விளையாடும் பேட்ஸ்மேன் கிடையாது. பாலை விட்டு பொறுமையுடன் விளையாடுவார். எனவே வலைப்பயிற்சியில் புஜாராவுக்கு எதிராக பந்து வீசுவது கடினம்.
இந்திய அணிக்காக ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதேவேளையில் அவரது பந்துவீச்சிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முதல் இன்னிங்சில் கூட மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி எங்களுடைய வேலையை அவர் சுலபமாக்கினார்” என்று முகமது சிராஜ் கூறியுள்ளார்.