அடுத்த போட்டியில் இரண்டு மாற்றங்களை இந்தியா செய்ய வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!

Updated: Tue, Oct 26 2021 14:15 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றுகள் நடந்து வருகிறது. இதில், கடந்த 24ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணியில் பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் இருந்ததால் இந்தியாதான் வெற்றிபெறும் எனக் கருதப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அணி போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி, இறுதியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் படுமோசமாக தோற்ற நிலையில், எஞ்சியிருக்கும் நான்கு லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. அடுத்து, நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது. அந்த அணிக்கு எதிராக கடுமையாக போராடினால் மட்டுமே வெற்றிபெற முடியும். தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியை சமாளித்தே ஆக வேண்டும். அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுகின்றனர்.

அமீரக மைதானங்கள் அனைத்தும் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது. இதனால், இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் நிச்சயம் கடும் போட்டியை அளிக்கும் எனக் கருதப்படுகிறது. இறுதியில் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள்தான் இருக்கிறது. இதனால் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள்தான் இந்தியாவுக்கு பெரும் சவால்களை தரும் எனக் கருதப்படுகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு எதிராகவும் வெல்ல வேண்டும் என்றால், இந்தியா நிச்சயம் இரண்டு மாற்றங்களை செய்தே ஆக வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,“புவனேஷ்வர் குமார் முன்புபோல் பந்துவீசுவதில்லை, தடுமாறுகிறார். இதனால், அவருக்குப் பதிலாக ஷர்தூல் தாகூரை கொண்டு வந்தால், பேட்டிங்கிலும் இந்தியாவுக்கு உதவிக்கரமாக இருக்கும். அதேபோல், ஜடேஜாவை சேர்ப்பது குறித்தும் யோசிக்க வேண்டும். அவர் பந்துவீசுகிறார். 4 ஓவர்களை சிறப்பாக வீச முடியும். ஆனால், விக்கெட் எடுப்பார் என உறுதியாக கூற முடியாது. அவர் ராகுல் சஹார் அல்லது யுஜ்வேந்திர சஹால் அல்லது ரஷித் கான் கிடையாது. அவர் ஒரு ஸ்பின்னர் அவ்வளவுதான்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இருப்பினும், பேட்ஸ்மேனாக அவர் தேவை. அடுத்து, வருண் சக்ரவர்த்தி. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டே ஆக வேண்டும். இதனால், அடுத்து போட்டியில் அஸ்வின் அல்லது ராகுல் சஹார் போன்ற ஒரு ஸ்பின்னரை சேர்த்து, சுழற்பந்து வீச்சில் இருக்கும் பலவீனத்தை சரி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை