கிறிஸ் கேர்ன்ஸின் உடல்நிலை முன்னேற்றம்!
நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கேர்ன்ஸ். இவர் நியூசிலாந்து அணிக்காக 1989ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 62 டெஸ்டுகள், 215 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்பட்ட கேர்ன்ஸ், கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றினார். அதன்பின் ஆஸ்திரேலியாவிலுள்ள கேன்பெர்ராவில் வசித்துவந்த இவருக்கு சமீபத்தில் இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன்பிறகு அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மற்றொரு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில் அவருடைய உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கேர்ன்ஸின் வழக்கறிஞர் ஆரோன் லாயிட் கூறுகையில், “தற்போது செயற்கை சுவாச உதவியின்றி நல்ல நிலையில் கேர்ன்ஸ் உள்ளார். சிட்னியில் உள்ள மருத்துவமனையிலிருந்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் அவரால் பேச முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.