சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கிறிஸ் ஜோர்டன்!

Updated: Sun, Jun 09 2024 10:34 IST
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கிறிஸ் ஜோர்டன்! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடியான தொடக்கத்தாலும், மார்கஸ் ஸ்டொய்னிஸின் அபாரமான ஃபினிஷிங்காலும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. 

இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 39 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 30 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஜார்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் 202 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 

இதில் பில் சால்ட் 37 மற்றும் ஜோஸ் பட்லர் 42 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.  இதனால் ஒருபக்கம் ரன்கள் சேர்த்த போதிலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவிய பட்சத்திலும் அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி நேற்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் இந்த மைல் கல்லை எட்டும் இரண்டாவது இங்கிலாந்து வீரர் மற்றும் 13ஆவது சர்வதேச வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 

இதற்கு முன் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஆதில் ரஷித் 100 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்திருந்தார். அவர் இதுவரை 108 போட்டிகளில் விளையாடி இரண்டு முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் சேர்த்து 111 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து கிறிஸ் ஜோர்டன் 92 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை