ஐபிஎல் 2022: குல்தீப் தரப்பில் பகீர் குற்றச்சாட்டு; கொல்கத்தா அணிக்கு புது சிக்கல்!

Updated: Tue, Mar 29 2022 17:10 IST
Image Source: Google

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் கடந்த 26ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஃபார்ம் அவுட் எனக்கூறப்பட்ட ரகானே, உமேஷ் யாதவ் என பல முன்னணி வீரர்கள் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளனர்.

இதில் மிகவும் முக்கியமான ஒருவர் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தான். டெல்லி அணிக்காக விளையாடும் அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். இவர் விக்கெட் எடுத்தவுடன் ரசிகர்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்டனர். இதற்கு காரணம் கடந்த 2 சீசன்களாக அவர் புறக்கணிக்கப்பட்டது தான்.

கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த குல்தீப் யாதவுக்கு கடந்த 2 சீசன்களில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என்ற காரணத்தை கூட அணி நிர்வாகமும் கேப்டனும் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதனால் இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காமல் போன குல்தீப் யாதவ், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரூ.2 கோடிக்கு தான் ஏலம் போனார்.

இந்நிலையில் குல்தீப்புக்கு நடந்த கொடுமை குறித்து அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உண்மையை கூற வேண்டுமென்றால் குல்தீப் நன்றாக தான் விளையாடினார். ஆனால் கொல்கத்தா அணி அவரை புறக்கணித்தது. ஒரு வேலைக்காரர் போன்று அணிக்குள் நடத்தியது. இதனால் அவர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டால் போதும் என்ற எண்ணம் தான் எங்களுக்கு இருந்தது.

அந்த அணியால் பொருளாதார ரீதியாகவும் குல்தீப் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளார். ஏலத்தில் ரூ. 9 - 10 கோடி வரை சென்றிருக்க வேண்டிய வீரர், இன்று வெறும் ரூ. 2 கோடிக்கு தான் வாங்கப்பட்டுள்ளார். எனினும் மனம் தளராமல் இந்திய அணியில் வாய்ப்பு பெற வேண்டும் என கடுமையாக போராடுகிறார்” என கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை