அணியில் ஏற்படும் தொடர் மாற்றங்கள் குறித்து ராகுல் டிராவிட் விளக்கம்!

Updated: Sun, Oct 02 2022 19:36 IST
Image Source: Google

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 – 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக பங்கேற்கும் இந்த கடைசி தொடரில் இந்தியா வென்றாலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் இறுதியாக விளையாடப் போகும் 11 பேர் யார் என்ற கேள்வி இப்போதும் நிலவுகிறது. 

ஏனெனில் கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியாவுக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் ஏராளமான மாற்றங்களை செய்து வருகின்றனர்.

அணி தோற்றாலும் வென்றாலும் ஒவ்வொரு போட்டிக்கும் பின்பும் ஒவ்வொரு தொடருக்கும் பின்பும் மாற்றங்கள் நிகழ்வது இவர்களது தலைமையில் சாதாரணமாகி விட்டது. அதிலும் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய சூரியகுமார், ரிஷப் பந்த் ஆகியோரை தொடக்க வீரர்களாக பயன்படுத்தியது, கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காதது, அற்புதமான ஃபார்மில் இருந்தும் தினேஷ் கார்த்திக்கை நம்பாமல் ரிஷப் பந்தையே முக்கிய போட்டிகளில் பயன்படுத்தியது என அவர்கள் செய்யும் மாற்றங்களுக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அதைவிட காயமடைந்த பும்ரா, ஷமி ஆகியோருக்கு பதிலாக தீபக் சஹர் இருந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல், உமேஷ் யாதவிற்கு 3 வருடங்களுக்குப் பின் வாய்ப்பு கொடுத்தது என பல முடிவுகளை இந்திய அணி மேற்கொண்டிருந்தது. ஆனால் உலகக் கோப்பைக்கு 15 நாட்கள் முன்பாக கூட இப்படி சோதனை என்ற பெயரில் மாற்றங்களை செய்வது அணியை ஒன்றாக செட்டிலாக வைத்து வெற்றி பெறுவதற்கு வழி வகுக்காது என்று நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சிக்கிறார்கள்.

இந்நிலையில் தொடர்ச்சியாக ஒரே 11 பேர் அணியை வைத்து விளையாடும் போது அணியின் உண்மையான பலம் தெரியாது என்பதால் அணியில் இடம்பிடித்துள்ள 15 வீரர்களின் பலத்தை தெரிந்து கொள்வதற்காக மாற்றங்கள் செய்யப்படுவதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் ஒரே 11 பேர் அணியை மீண்டும் மீண்டும் விளையாடுவோம் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் நம்பத்தகாதது என்று நினைக்கிறேன். சில நேரங்கள் வேண்டுமென்றே மாற்றங்கள் நிகழ்வதாக அனைவரும் நினைக்கின்றனர். இருப்பினும் கடந்த போட்டியில் பும்ரா விளையாடுவது சோதனையல்ல. அவர் காயத்தால் விளையாடவில்லை. 

மேலும் கடந்த ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரே லெவன் அணியை வைத்து நாங்கள் விளையாடிய போது நீங்கள் ஏன் மாற்றங்கள் செய்யவில்லை என்று எங்களை அனைவரும் கேட்டனர். எனவே இந்த 2 வழிகளிலும் உங்களால் வெல்ல முடியாது. மேலும் வீரர்கள் சந்திக்கும் காயங்கள் போன்ற நிகழ்வுகள் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது. 

அதனால் செய்யப்படும் மாற்றங்களால் சமீபத்தில் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நாங்கள் அயர்லாந்தில் டி20 தொடரில் விளையாடினோம். அது போன்ற நன்மையை நோக்கி தான் இந்த மாற்றங்கள் நடக்கின்றன. அத்துடன் 11 பேர் அணியை நீங்கள் 11 மாதங்களுக்கு முன்பாகவே தேர்வு செய்ய முடியாது. ஏனெனில் மைதானங்கள், கால சூழ்நிலைகள் பற்றி உங்களுக்கு தெரியாது. அத்துடன் 15 பேர் அணியில் இருப்பவர்கள் எந்த வகையான நுணுக்கங்களை தெரிந்துள்ளார்கள் என்பதே எனக்கு முக்கியம். 

அந்த வகையில் டி20 உலகக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் நுணுக்கமான வீரர்களையே நாங்கள் பார்க்கிறோம். உலகக்கோப்பை போன்ற தொடர்களில் 5 வெவ்வேறு மைதானங்களில் 5 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக நீங்கள் விளையாட வேண்டும். எனவே அதற்கேற்ற வளைவு தன்மை கொண்ட வீரர்கள் உங்களது அணியில் இருக்க வேண்டும். அந்த வகையில் கடந்த சில தொடர்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாற்றங்கள் நடந்து தான். ஆனால் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் அணியில் அனைவரும் கடந்த 6 மாதங்களில் தேவையான கிரிக்கெட் விளையாடி தேவையான அனுபவத்தை பெற்றுள்ளார்கள்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை