பாகிஸ்தான் டி20 தொடரில் இருந்து கூப்பர் கன்னொலி விலகல்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெர்த் மைஅதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எதிரணியின் பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுதடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலிய 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சீன் அபோட் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரி ராவுஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்துல்லா ஷஃபிக் 37 ரன்களுக்கும், சைம் அயூப் 42 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கியா பாபர் ஆசாம் 28 ரன்களையும், முகமது ரிஸ்வான் 40 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 26.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஹாரிஸ் ராவுஃப் வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் போது ஆஸ்திரேலிய அணிக்காக 5ஆம் வரிசையில் களமிறங்கிய கூப்பர் கன்னொலி பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹொஸ்னைன் பந்துவீச்சில் காயமடைந்த களத்தில் இருந்த பாதியிலேயே வெளியேறினார். அதன் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதுடன், அவர் மீண்டும் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் செய்ய களத்திற்கு திரும்பவில்லை. இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் கன்னொலிக்கு எழும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்தும் கூப்பர் கன்னொலி விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அவருக்கான மாற்று வீரரையும் கூடிய விரைவில் அறிவிப்பதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்சமயம் கன்னொலியும் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.