மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 4 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - விராட் கோலி ஆகியோர் ஓரளவு தாக்கு பிடித்து மூன்றாவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் 20 ரன்களில் ஷுப்மன் கில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலியும் 17 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 72 ரன்களுக்கே 4 விக்கெட் இழந்து தடுமாறியது.
அதன்பின் இணைந்துள்ள ரிஷப் பந்த் - ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் 40 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 26 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களிலும் என ஆட்டமிழக்க, இறுதியில் அதிரடி காட்டிய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 72.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்த விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதன்படி இன்னிங்ஸின் 66ஆவது ஓவரை பாட் கம்மின்ஸ் வீசிய நிலையில் அந்த ஓவரின் கடைசி பந்தை லெக் சைடில் வைடராக வீச, அதனை அடிக்க முயன்ற வாஷிங்டன் சுந்தர் பேட்டை சுழற்றினார். ஆனால் அவரால் அந்த பந்தை சரியாக அடிக்க முடியாததால், பந்து விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. பந்து வாஷிங்டன் சுந்தரின் கையுறை அருகில் இருந்து வந்ததால் விக்கெட் கீப்பார் அலெக்ஸ் கேரி கள நடுவரிடம் அவுட் என அப்பில் செய்தார்.
ஆனால் கள நடுவர் நாட் அவுட் என்று அறிவித்த நிலையில், கேப்டன் கம்மின்ஸ் மூன்றாம் நடுவரிடம் முறையிட்டார். மூன்றாம் நடுவரின் சோதனையில் பந்து வாஷிங்டன் சுந்தர் கையுறை அருகே செல்லும் பொது ஸ்னிக்கோ மீட்டரில் சில அதிர்வுகள் பதிவானது தெரிந்தது. இருப்பினும் மூன்றாம் நடுவர் பலமுறை சோதித்த பிறகு வாஷிங்டன் சுந்தருக்கு அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். இதனால் ஏமாற்றமடைந்த சுந்தர் களநடுவர்களிடம் சில வார்த்தைகளை கூறி பெவிலியனுக்கு திரும்பினார்.
Also Read: Funding To Save Test Cricket
அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ராவும் கள நடுவரிடம் கடந்த போட்டியில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். இதனால் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏனெனில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இதே முறையில் தனது விக்கெட்டை இழந்தது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தற்போது வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.