கூச் பெஹார் கோப்பை 2024: யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த பிரகார் சதுர்வேதி!
இந்தியாவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான நான்கு நாள் டெஸ்ட் போட்டியாக கூச் பெஹார் கோப்பை நடைபெறும். இந்த ஆண்டின் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியும் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்தின. சிவம்மோஹா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 380 ரன்கள் எடுத்தது. கர்நாடக அணியின் தரப்பில் ராகுல் டிராவிட்டின் மகன் சமீத் டிராவிட் வேகபந்துவீச்சாளராக இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனை அடுத்து கர்நாடக அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.
இதில் கர்நாடகா சார்பில் களமிறங்கிய பிரகார் சதுர்வேதி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில் அவர் 256 ரன்கள் எடுத்திருந்தார். இதனை அடுத்து இன்று தன்னுடைய ஆட்டத்தை பிரகார் சதுர்வேதி தொடங்கினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய பிரகார் சதுர்வேதி விக்கெட்டை எடுக்க மும்பை அணி எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
இப்போட்டியில் 638 பந்துகளை எதிர்கொண்ட பிரகார் 404 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 46 பவுண்டரிகளும்,மூன்று சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் கர்நாடகா அணி 890 ரன்கள் குவித்து எட்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. மும்பையை விட முதல் இன்னிங்க்ஸில் 510 ரன்கள் கூடுதல் பெற்றதால் கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும், ஒரு தொடரின் இறுதிப் போட்டியில் 400 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை உலக அளவில் பிரகார் சதுர்வேதி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.
மேலும் அவர் யுவராஜ் சிங் கூச் பெகார் கோப்பையில் 24 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தியிருந்த சாதனையை உடைத்தார். இதற்கு முன் யுவராஜ் சிங் 358 ரன்கள் எடுத்திருந்தது சாதனையாக அமைந்திருந்தது. அதனை 404 ரன்களை குவித்து பிரகார் சதுரவேதி முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.