அசாரூதின் சாதனையை சமன் செய்த புஜாரா!
இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் முக்கியமான தூணாகவும் திகழ்ந்தவர் புஜாரா. இந்தியாவிற்காக 95 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6713 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய புஜாரா, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான ஃபார்மில் இருந்ததால் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இந்திய டெஸ்ட் அணியில் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க, கவுண்டியில் சிறப்பாக ஆடுவது ஒன்றே வழி என்பதை உணர்ந்து கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடி சதங்களை விளாசிவருகிறார். டெர்பிஷைர் அணிக்கு எதிராக ஏற்கனவே ஒரு இரட்டை சதமடித்திருந்த புஜாரா, இப்போது துர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி மற்றுமொரு இரட்டை சதம் அடித்தார்.
துர்ஹாம் அணிக்கு எதிராக சசெக்ஸ் அணி ஆடிவரும் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி 203 ரன்களை குவித்தார் புஜாரா. இது கவுண்டி கிரிக்கெட்டில் புஜாராவின் 2வது இரட்டை சதம். இதன்மூலம் கவுண்டி கிரிக்கெட்டில் 2 இரட்டை சதங்களை அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா படைத்துள்ளார். இதற்கு முன் முகமது அசாருதீன் மட்டுமே கவுண்டி கிரிக்கெட்டில் 2 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். மேலும், முதல் தர கிரிக்கெட்டில் புஜாராவின் 15வது இரட்டை சதம் இதுவாகும்.