சிபிஎல் 2022: கைல் மேயர்ஸ் அதிரடி; பார்போடாஸ் அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும், பார்போடாஸ் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. மேலும் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 17 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஆண்ட்ரே ஃபிளெட்சர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஆனாலும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ஃபிளெட்சர் அரைசதம் கடந்ததுடன் 81 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதனால் 17 ஓவர்கள் முடிவில் பேட்ரியாட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைச் சேர்த்தது. பார்போடாஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர், ரோமன் சிம்மண்ட்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய பார்போடாஸ் அணியில் ரஹீம் கார்ன்வால் - கைல் மேயர்ஸ் அணி அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கார்ன்வால் 39 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த கைல் மேயர்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 73 ரன்களில் மேயர்ஸும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆசம் கான் - டேவிட் மில்லர் இணை இலக்கை எட்ட உதவினர். இதன்மூலம் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 15.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் அணியையும் வீழ்த்தி வெற்றிபெற்றது.