சிபிஎல் 2022: ராம்பால் பந்துவீச்சில் வீழ்ந்தது ஜமைக்கா தலவாஸ்!
வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலவாஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் பிராண்டன் கிங் 7, அமிர் ஜோங்கோ 6, ஷமாரா ப்ரூக்ஸ் 20, ரோவ்மன் பாவல் 1, ரெய்ஃபெர் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
இதையடுத்து களமிறங்கிய ஃபேபியன் ஆலன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜமைக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ரவி ராம்பால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நிக்கோலஸ் பூரன், டியன் வெப்ஸ்டர் ரன் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த காலின் முன்ரோ - டிம் செய்ஃபெர்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் செய்ஃபெர்ட் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட காலின் முன்ரோவும் 40 ரன்களோடு நடையைக் கட்டினார்.
இருப்பினும் நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜமைக்கா தலவாஸ் அணியை வீழ்த்டி வெற்றிபெற்றது.