சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை மீண்டும் வீழ்த்தியது ஃபால்கன்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் டார் ஆர்டர் வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்படி அணியின் தொடக்க வீரர்கள் பேரிஸ் 9 ரன்களுக்கும், சுனில் நரைன் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 14 ரன்களிலும், கேசி கார்டி 8 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த டிம் டேவிட் மற்றும் கேப்டன் கீரன் பொல்லார்ட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் நிதான அட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிம் டேவிட் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸலும் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் கீரன் பொல்லார்ட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீர்ர்களாலும் ரன்களைச் சேர்க்க முடியவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட்டுகள் இழப்பிறு 138 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஃபால்கன்ஸ் அணி தரப்பில் ஷமார் ஸ்பிரிங்கர் மற்றும் ஃபேபியன் ஆலன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணிக்கும் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் நட்சத்திர தொடக்க வீரர் பிராண்டன் கிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கோஃபி ஜேம்ஸும் 10 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் மற்றும் ஹசன் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதத்தை நெருங்கிய ஜஸ்டின் க்ரீவ்ஸ் 46 ரன்களை எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேற, மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெலிப்படுத்தி வந்த ஹசன் கானும் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இமாத் வசீமும் அதிரடியாக விளையாட ஃபால்கன்ஸின் வெற்றியும் உறுதியானது.
Also Read: Funding To Save Test Cricket
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இமாத் வசீம் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களைச் சேர்க்க, ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியாந்து 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இதன்மூலம் ஃபால்கன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபால்கன்ஸ் அணி வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.