சிபிஎல் 2024: பேட்ரியாட்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பதுவீசுவதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கயானா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிம் ராபின்சன் மற்றும் கெவின் சின்க்ளேர் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப்பும் 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மொயீன் அலி, கீமோ பால், பிரிட்டோரியஸ் 12, குடகேஷ் மோட்டி என அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதற்கிடையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த நிலையில், 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 63 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே சேர்த்தது. பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் அஷ்மெத் நெத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பேட்ரியாட்ஸ் அணிக்கு எவின் லூயிஸ் - கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபிளெட்சர் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்கள் மைக்கைல் லூயிஸ் 4 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 3 ரன்களிலும், ஜோஷுவா டா சில்வா 9 ரன்களிலும், ரைலீ ரூஸோவ் 11 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் அரைசதத்தை நெருங்கிய எவின் லூயிஸும் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 49 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய டோமினிக் டார்க்ஸ் 3, ரியான் ஜான் 5, ஆன்ரிச் நோர்ட்ஜே 0, அஷ்மெத் நெத் 5 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் பேட்ரியாட்ஸ் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கயானா அணி தரப்பில் ஷமார் ஜோசப் 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி, கேப்டன் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் கயானா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.