சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஃபால்கன்ஸை வீழ்த்தி பேட்ரியாட்ஸ் த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி, இத்தொடரின் முதல் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தி ஃபால்கன்ஸ் அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணிக்கு டெடி பிஷப் - ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிஷப் ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த ஃபகர் ஸமான் - கோஃபி ஜேம்ஸ் இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அரைசதத்தை நெருங்கிய ஃபகர் ஸமான் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 43 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து கோஃபி ஜேம்ஸ் 22 ரன்களுக்கும், சாம் பில்லிங்ஸ் 18 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜூவல் ஆண்ட்ரூ - ஃபேபியன் ஆலன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடி வந்த ஜூவல் ஆண்ட்ரூக் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருக்கு துணையாக விளையாடிய ஃபேபியன் ஆலனும் 24 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் ஆன்ரிச் நோர்ட்ஜே, டோமினிக் டிரேக்ஸ், தப்ரைஸ் ஷம்ஸி உள்ளிட்டோர் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையடைய பேட்ரியாட்ஸ் அணிக்கு எவின் லூயிஸ் மற்றும் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 29 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து எவின் லூயிஸ் 25 ரன்களிலும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய கைல் மேயர்ஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்களிலும், ஓடியன் ஸ்மித் 27 ரன்களிலும், ரைலீ ரூஸோவ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கைல் மேயர்ஸும் 39 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, பேட்ரியாட்ஸ் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு இருந்த நிலையில், களத்தில் இருந்த டோமினிக் டிரேக்ஸ் 17 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய அஷ்மீட் நெத் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, போட்டியின் பரபரப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்ததுடன், பேட்ரியாட்ஸ் அணி மீதான அழுத்தமும் அதிகரித்தது.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் இறுதியில் நோர்ட்ஜே 4 ரன்கலையும், ஷம்ஸி ஒரு ரன்னையும் என சேர்த்து கடைசி பந்தில் அணியை வெற்றிபெற செய்தனர். இதன்மூலம் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியானது கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி நடப்பாண்டு சிபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக கைல் மேயர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.